முருகன் கோவில் அன்னதான மண்டபம் கட்டுமான பணிகள்
மஞ்சூர்:அன்னமலை முருகன் கோவிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதான மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் பழனி என்றழைக்கப்படும் அன்னமலை முருகன் கோவிலில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் காவடி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தவிர, மாதந்தோறும் கிருத்திகை பூஜையும் சிறப்பாக நடத்தப்படுகிறது. இக்கோவிலுக்கு கேரள, கர்நாடக மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.பக்தர்களின் வசதிக்காக அன்னதான மண்டபம் கட்ட கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானம் கட்டும் பணி துவக்கப்பட்டது. கீழ்தள பணிகள் முடிவடைந்த நிலையில், மேல் தளத்தில் கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. காவடி பெருவிழாவிற்குள் இப்பணிகள் நிறைவு பெற உள்ளது.