அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, "அரோகரா கோஷம் விண்ணதிர கோலாகலமாக கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமிகளை தரிசனம் செய்தனர்.நாமக்கல் மாவட்டத்தில், சைவ சமய குயவரான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமான, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் கும்பாபிஷேக விழாவில், சித்திவிநாயகர், அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவபெருமாள், நடராஜர், காசிவிஸ்வநாதர், சகஸ்ரலிங்கம், மல்லிகார்ஜீனர், நல்லீசர், ஆதிஷேசன், சிவசூரியன், பைரவர் உள்ளிட்ட சன்னதி கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக, மங்களஇசை, தேவார பன்னிசை, பரிவார யாக சாலை பூஜை, பரிவார கும்பம் புறப்பாடு, ப்ரதான யாக சாலை பூஜை, ஆறாம் கால யாக பூஜை, அனைத்து பரிவார சம கால கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது.திருமான்பார்ப்பு விழா, விஷ்வரூப தரிசனம், திருக்கல்யாணம், திருக்கோடி தீபம் வைத்தல், துவஜாரோகணம், வேத இதிகாச புராண பிரபந்த சாற்று முறை, பிரம்மகோசம், தீர்த்த பிரசாதம், அர்த்தநாரீஸ்வரர் கும்பாபிஷேகம், நாகேஸ்வரர் கும்பாபிஷேகம், திருக்கல்யாணம் திருவீதி உலா நடந்தது. ஸ்வாமிகள் பரிவாரங்களுடன் நான்கு ரதவீதிகள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். பக்தர்கள் அதிகாலை முதல், விண்ணதிர "அரோகரா கோஷத்துடன் கும்பாபிஷேகத்தை கண்டு மகிழ்ந்தனர். மலைக்கோவிலுக்கு செல்ல இலவச பஸ் வசதி செய்யபட்டிருந்தது. படிகட்டுகள் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். மலைக்கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க, நகரின் முக்கிய வீதிகளில் "டிவி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யபட்டது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி, எஸ்.பி., செந்தில்குமார், எம்.பி.,க்கள் சுந்தரம், செல்வகுமார் சின்னையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.