மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.32.80 லட்சம் காணிக்கை!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், 32 லட்சத்து 80 ஆயிரத்து 228 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் காணிக்கையாக கோவில் உண்டியல்களில் பணம் செலுத்துவது வழக்கம். இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்றுமுன்தினம் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் ஆனந்த் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டன. மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கார்த்திக், பொள்ளாச்சி ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டனர். 16 நிரந்தர உண்டியல்களில், 22 லட்சத்து 97ஆயிரத்து 651 ரூபாயும், ஆறு தட்டுக்காணிக்கை உண்டியல்களில், ஒன்பது லட்சத்து 82 ஆயிரத்து 577 ரூபாயும் என மொத்தம் 32 லட்சத்து 80 ஆயிரத்து 228 ரூபாய் வசூலாகி இருந்தது. மேலும், 141 கிராம் தங்கமும், 292 கிராம் வெள்ளியும் இருந்தது. காணிக்கை எண்ணும் பணியில், புலவர் லோகநாத ஈஸ்வரன் மற்றும் கோவில் ஊழியர்கள், சலவநாயக்கன்பட்டி கிராம மக்கள் பங்கேற்றனர்.