பேரூர் பட்டீஸ்வரர் கோவில்: நாளை தேரோட்டம்!
பேரூர் : கோவை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தேர் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல், இந்த ஆண்டும் பங்குனி உத்திரத்தேர் திருவிழா, கடந்த, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, ஐந்து நாட்களாக பட்டீஸ்வரர் மற்றும் பச்சை நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.ஏழாவது நாளான நாளை காலை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலா வருகிறார். மாலை, 4:30 மணியளவில் திருத்தேர் வடம்பிடிக்கப்படுகிறது. தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கடவுள் அருள் பெற உள்ளனர். விழாவின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க, தீயணைப்பு படையினரும், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.