உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பம் விடும் நாளில் சந்திர கிரஹணம் வாய்க்காலில் விடும் நிகழ்ச்சி தாமதம்?

கம்பம் விடும் நாளில் சந்திர கிரஹணம் வாய்க்காலில் விடும் நிகழ்ச்சி தாமதம்?

ஈரோடு : சந்திர கிரஹணத்தால், இந்தாண்டு கம்பம் வாய்க்காலில் விடும் நிகழ்ச்சி தாமதமாகும் என்பதால், போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரிய மாரியம்மன் வகையறாவில் பெரிய மாரியம்மன், நடு மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. மூன்று கோவில்களிலும் ஒரே நாளில் பூச்சா ட்டு, கம்பம் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். அதுபோல், ஒரே நாளில் மூன்று கோவில்களில் இருந்தும் கம்பம் எடுக்கப்பட்டு, நகரில் ஊர்வலமாக சென்று காரை வாய்க்காலில் விடப்படுவது வழக்கம்.இந்தாண்டு கடந்த, 17ம் தேதி பூச்சாட்டு நடந்தது. 21ம் தேதி கம்பம் நடப்பட்டது. வரும், 4ம் தேதி மதியம் மூன்று கோவில்களில் இருந்தும், கம்பம் எடுத்து மாநகரில் ஊர்வலமாக சென்று காரை வாய்க்காலில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்தாண்டு, போலீஸாரின் கடுமையான உத்தரவால், நான்கு மணி நேரத்தில் ஊர்வலம் முடிந்து கம்பங்கள், வாய்க்காலில் விடப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டுகளில், கம்பம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட போது, ஏதாவது ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறிய வண்ணம் இருந்தன. கடந்தாண்டை போல், இந்தாண்டும், நான்கு மணி நேரத்துக்குள் ஊர்வலத்தை முடிக்க வேண்டும் என்று போலீஸார் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், தற்போது அவர்கள் திட்டத்துக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு இருப்பதால், அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும், 4ம் தேதி மதியம், 3.45 முதல் இரவு, 7.15 மணி வரை சந்திர கிரஹணம் பிடிக்கிறது. வழக்கமாக கம்பங்கள், இரண்டரை மணிக்கு பின் எடுக்கப்பட்டு, இரவு ஏழு அல்லது, எட்டு மணிக்குள் வாய்க்காலில் விடப்படும். இந்தாண்டு கிரஹணம் குறுக்கிடுவதால், அந்த நேரத்தில் கோவிலில் இருந்து கம்பத்தை எடுத்து செல்லவோ, கம்பங்களை வாய்க்காலில் விட்டு கோவிலுக்கு வரவோ கூடாது என்ற ஐதீகம் குறுக்கிடுகிறது. எனவே, கிரஹணம் பிடிப்பதற்கு முன்னரே, கம்பங்களை எடுத்து ஊர்வலமாக சென்று கிரஹணம் விட்ட பின், கோவிலுக்கு வர பூசாரிகள், பக்தர்கள் திட்டமிட்டு உள்ளனர்.ஐந்து மணி நேரத்துக்கும் மேல், ஊர்வலம் நடக்கும் என்பதால், போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறுகிய நேரத்தில் ஊர்வலம் சென்றால் சட்டம், ஒழுங்கு பிரச்னை இன்றி சமாளிக்கலாம். ஆனால், ஊர்வல நேரம் அதிகரித்து இருப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட கூடும், என, போலீஸார் கருதுகின்றனர். மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜா கூறுகையில், ""4ம் தேதி மதியம், 3.05க்கு, கோவிலில் இருந்து கம்பத்தை எடுத்து ஊர்வலமாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !