பங்குனி உத்திர தேர்த்திருவிழா!
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த முரசுப்பட்டி முருகன் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழா இன்று (ஏப்., 3) நடக்கிறது. விழாவையொட்டி, ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள்மற்றும் ஸ்வாமி ரதம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. இப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு, அலகு குத்தி தங்களது நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். விழாக்குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 3 மணிக்கு, தேரில், ரதம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
காரிமங்கலம் அருணேஸ்வர் மலைக்கோவில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணி ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. காலை, 9 மணிக்கு, ஸ்வாமி ரதம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம், 12 மணிக்கு, தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி சார்பில், பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ., அன்பழகன், பள்ளி தாளாளர் மல்லிகா அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். மாலை, வான வேடிக்கையுடன், ஸ்வாமி நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தர்மபுரி, அன்னசாகரம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், அதிகாலை, ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. காலை, 10.30 மணிக்கு பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து தேரை, நிலை பெயர்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், பாப்பாரப்பட்டி சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், நெசவாளர் நகர் சக்தி விநாயகர் வேல்முருகன் கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது.