உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா!

பகவதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா!

கோபி : கோபி, கணக்கம்பாøளையம் பகவதி அம்மன் கோவில், குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோபி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடக்கும்.

நடப்பாண்டு திருவிழா, கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 26ல் கம்பம் நடுதல், ஏப்., 1ல் மாவிலை தோரணம்கட்டி, அரண்மனை பொங்கல் வைத்தனர்.முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா, நேற்று நடந்தது. கோவில் முன், 60 அடி குண்டம் அமைக்கப்பட்டு, நான்கு டிராக்டரில் பத்து டன் கரும்பு (ஊஞ்சமர கட்டைகள்) அடுக்கி நெருப்பு மூட்டினர். காலை, 3 மணிக்கு அம்பாள் பவனி வருதல், 7 மணிக்கு விநாயகர் பூஜை, முருகர் பூஜை, நந்தி பூஜை,
முனியப்பன் பூஜை, கருப்புசாமி பூஜை, தன்னாசி பூஜை, காளவிளக்கு பூஜைகள் நடந்தது. காலை, 8 மணிக்கு அம்மை அழைத்தல், 10 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது.

மதியம், 1 மணிக்கு நடக்கும் குண்டம் இறங்கும் நிகழ்ச்சிக்காக, பக்தர்கள் நீண்ட வரிசையில், நேற்று அதிகாலை முன் கோவில் வளாகத்தில் குவிந்திருந்தனர். சுண்டக்கரடு, வேதபாறை,
கொண்டையாம்பாளையம், வலையபாளையம், பங்களாப்புதூர், துறையம்பாளையம், கள்ளிப்பட்டி, குண்டேரிப்பள்ளம், கணக்கம்பாளையம், எரங்காட்டூர், வினோபாநகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் முன் குவிந்தனர்.

தலைமை பூசாரி செந்தில்குமார், குண்டத்துக்கு கற்பூரம் தீபம் காண்பித்து, சிறப்பு பூஜை செய்தார். பூசாரி தனது இரு கரங்களால், குண்டத்தில் உள்ள நெருப்பை எடுத்து, வானத்தை நோக்கி, மூன்று முறை இறைத்தார். அதன் பின், பூக்கள், கனி, பழம், எழுமிச்சை கனிகளை வானத்தை நோக்கி வீசினார்.

கூடியிருந்த பக்தர்கள், அதை லாவகமாக பிடித்தனர். பூ, பழம், கனி, தங்கள் கையில் கிடைப்பதை அதிர் ஷ்டமாக பக்தர்கள் நினைப்பர். தலைமை பூசாரி குண்டம் இறங்கியதும், பிற பூசாரிகள் மற்றும் நிர்வாக குழு உறு ப்பினர்கள், குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

மதியம், 1 மணிக்கு வெயிலையும் பொறுட்படுத்தாமல், பக்தர்கள் வரிசையில் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்கி ஓடி வரும் பக்தர்களுக்கு, அம்மன் அருள் கிடைக்க முகத்தில் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதையடுத்து அனைத்து பக்தர்களுக்கும், தயிர் சாதம், சாம்பார் சாதம், கற்கண்டு கேசரி போன்றவை பாக்குமட்டை தட்டில் வினியோகம் செய்யப்பட்டது.
ஏற்பாடுகளை தக்கார் அருள்குமார் மற்றும் பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !