உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி பங்குனி உத்திர திருவிழா: 5 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு!

திருத்தணி பங்குனி உத்திர திருவிழா: 5 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு!

திருத்தணி: முருகன் கோவிலில் நேற்று நடந்த பங்குனி உத்திரப் பெருவிழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, பங்குனி உத்திரம் முன்னிட்டு, அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கவசம், தங்கவேல், வைரமாலை உள்பட பல்வேறு ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. காலை, 10:30 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் உற்சவ பெருமானுக்கு, 250 பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தன. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சர்க்கரை காவடிகள் எடுத்து வந்து, உற்சவ பெருமானுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். சில பக்தர்கள் மொட்டை அடித்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று, புனித வெள்ளி அரசு விடுமுறை மற்றும் பங்குனி உத்திரம் முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவரை தரிசிக்க குவிந்தனர்.

வீதி உலா: பொதுவழியில், ஐந்து மணி நேரமும், 25 மற்றும் 50 ரூபாய் சிறப்பு தரிசனத்தில், இரண்டரை மணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் ஒரு மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை பக்தர்கள் வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !