ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி திருக்கல்யாணம் கோலாகலம்
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி திருக்கல்யாணம், நேற்று கோலாகலமாக நடந்ததது. காஞ்சிபுரம் ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் மாலை, ஏலவார்குழலி ஒக்கப்பிறந்தான் குளம் பகுதிக்கு சென்றார். அங்கு மண்டகப்படி நடந்தது. இரவு 11:00 மணிஅளவில் மீண்டும் கோவிலை வந்தடைந்தார். அதன்பின், அங்குள்ள கம்பா நதியில் தவமிருந்து, சிவபெருமானை வணங்கியதால், பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து மணம் முடிப்பதற்கான மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பின், அதிகாலை 3:00 மணியளவில், ஆயிரம் கால் மண்டபத்தின் மேல் அமைக்கப்பட்ட மணமேடைக்கு, ஏலவார்குழலியுடன் ஏகாம்பரநாதர் எழுந்தருளினார். அங்கு யாகம் வளர்த்து, சிவாச்சாரியார்களால் மந்திரங்கள் ஓதப்பட்டன. அதிகாலை 4:19 மணிஅளவில் ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மணக்கோலத்தில் ஏகாம்பரநாதர் தங்க ரிஷப வாகனத்திலும், ஏலவார்குழலி சப்பரத்திலும் எழுந்தருளி, ராஜவீதிகளில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.