நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சனம்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி, அறநிலையத்துறை மற்றும் பொது தீட்சிதர்கள் என, தனித்தனியாக அழைப்பிதழ் அச்சடித்து வினியோகிப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், சோழ மன்னர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில், பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கோர்ட், வழக்கு என, 20 ஆண்டு கால போராட்டத்திற்குப் பின், 2009ம் ஆண்டு, பிப்., 2ம் தேதி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டு, நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அறநிலையத்துறை சார்பில், கோயிலில் பிரசாத கடை நடத்துவதுடன், ஒன்பது இடங்களில் காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. உண்டியல் வருவாய், கடந்த இரண்டு ஆண்டுகளில் 52 லட்சம் ரூபாய்; பிரசாதம் மூலம் வருவாய், 25 லட்சம் ரூபாய். அரசு கட்டுப்பாட்டிற்கு கோயில் கொண்டு வரப்பட்டதை எதிர்த்து, மேல் முறையீடு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், கோயில் முழுமையாக அரசு கட்டுப்பாட்டிற்கு வருவதில், சிக்கல் நீடிக்கிறது. இருந்தும், கோயிலில் ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கும் தரிசன விழாவின் போது, அறநிலையத்துறை சார்பில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஆனி திருமஞ்சன தரிசன விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதையொட்டி, அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் பெயரில் திருவிழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அதற்கு போட்டியாக, பொது தீட்சிதர்களுக்கு சொந்தமான கோயில் என, தீட்சிதர்கள் மற்றும் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் பெயரில், மற்றொரு திருவிழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இது தான், சிதம்பரத்தில் சமீப கால பரபரப்பு செய்தி!