உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில்களில் பால்குட அபிஷேகம்

அம்மன் கோவில்களில் பால்குட அபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: தமிழ் புத்தாண்டு அன்று, பொதட்டூர்பேட்டை பொன்னியம்மன் கோவிலில், 29ம் ஆண்டு பாலகுட அபிஷேகம் நடைபெற உள்ளது. பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலையின் தெற்கு அடிவாரத்தில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. இதில், நித்திய பூஜை, ராகு கால பூஜை, ஜாத்திரை உள்ளிட்டவை நடந்து வருகின்றன. கடந்த 28 ஆண்டுகளாக, தமிழ் புத்தாண்டு அன்று, மூலவருக்கு, 108 பால்குட அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. வரும் 14ம் தேதி, மன்மத ஆண்டு பிறப்பு அன்று, 108 பால்குடம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பொன்னியம்மனுக்கு, அபிஷேகம் செய்யப்பட உள்ளது. சித்திரை 1ம் தேதி, காலை 9:00 மணிக்கு, லட்சுகான் குளக்கரையில் உள்ள சப்த கன்னியர் கோவிலில் இருந்து, பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பகல் 12:00 மணிக்கு, மூலவர் பொன்னியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். மாலை 6:00 மணிக்கு அம்மன், மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளுகிறார். மேலும், நித்திய பூஜை நடத்த, உபயதாரர்கள் 60 பேருக்கு வாய்ப்பு உள்ளது. உரிய கட்டணம் செலுத்தி, பதிவு செய்து கொள்ளலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ளது திரவுபதி அம்மன் கோவில். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் துவங்கியவுடன், பாலாபிஷேகம் நடைபெறும். நேற்று இக்கோவில் விழாவை ஒட்டி, போந்தவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடம் ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர் பின், எடுத்து வந்த பாலை, கோவிலில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவை ஒட்டி, கிராமம் முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டன. பக்தர்கள் அனைவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !