கிரகண நேரத்தில் உலக்கை பூஜை!
திருப்பதி: ஆந்திர மக்கள், கிரகண நேரத்தில், உலக்கை பூஜை செய்தனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதவரி மாவட்ட கிராம பகுதிகளில், கிரகணம் நடைபெறும் (சந்திர, சூரிய) நேரத்தில், உலக்கை பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிரகண வேளையில், வீட்டு வாசல் முன், ஒரு பித்தளை தாம்பளம் வைத்து, அதில் நீர் நிரப்பி, அரிசி குத்தும் உலக்கையை, அதன் நடுவில் நிற்க வைப்பர்; பின், அதற்கு வீட்டில் உள்ள பெரியவர் முதல், சிறியவர் வரை பூஜை செய்வர். கிரகண நேரத்தில் பூஜை செய்யும் போது, அதன் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. நேற்று முன்தினம் மாலை, சந்திர கிரகணத்தின் போது, இது போன்ற பூஜை செய்தனர். மற்ற நாட்களில், உலக்கையை தாம்பாளத்தில் நிறுத்தினால், நிற்காமல் சிறிது நேரத்தில் விழுந்து விடும். ஆனால், கிரகண வேளையில் மட்டும், உலக்கை விழாமல் கிரகணம் முடியும் வரை நிற்கும் என, கூறப்படுகிறது.