பன்னிரு திருமுறை உரைவள கருத்தரங்கு!
சென்னை: தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள, தருமபுர ஆதீனத்தின் சமய பிரசார நிலையத்தில், நாளை காலை, நுாதன செல்வ முத்துக்குமாரசுவாமி உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக பெருவிழா, நடைபெறுகிறது. அதை முன்னிட்டு, பன்னிரு திருமுறை உரைவளக் கருத்தரங்கு நடக்கிறது. ரூ.6,000 விலையில் கடந்த, 1864ம் ஆண்டு, திருமயிலை சுப்பராய ஞானியார், முதன் முதலாக, திருஞான சம்பந்தரின் முதல் மூன்று திருமுறைகளை அச்சிட்டார். 1865ல் சுந்தரர் தேவாரமும், 1866ல், திருநாவுக்கரசர் தேவாரமும் அச்சிட்டார். அதையடுத்து, 1931ம் ஆண்டு வரை, பன்னிரு திருமுறைகளும், மூலம் மட்டும் பலரால் அச்சிடப்பட்டன. அவற்றுக்கு உரை எழுதுதல் பெரும் பாவம் என, சைவர்களால் கருதப்பட்ட நிலையில், 1913ம் ஆண்டில், சுந்தரர் தேவாரத்திற்கு மட்டும், காஞ்சிபுரம் மகா வித்துவான், ஸ்ரீமத் இராமானந்த யோகிகள், பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, விசேட உரை ஆகியவற்றை எழுதி அச்சிடுவித்தார். இந்த நிலையில், தருமை ஆதீனம், 25வது குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள், 1953ம் ஆண்டு முதல், ஒவ்வொரு திருமுறைக்கும், தகுந்த அறிஞர்கள் மூலம், ஒன்பது திருமுறைகள் வரை அச்சிட்டு வெளியிட்டார்.
அவருக்கு பின், 26வது குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக சுவாமிகள், எஞ்சியுள்ள திருமுறைகளை, உரையோடு அச்சிடுவித்தார். மொத்தம், பன்னிரு திருமுறைகளின் 16 தொகுதிகள், 2011ல், மூன்றாம் பதிப்பாக, தருமை ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு திருமுறை உரை நுாலிலும், அவ்வத் திருமுறை உரைத்திறம், தல அட்டவணை, தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள், திருமுறை ஆசிரியர் வரலாறு, பாடல் முதற்குறிப்பு அகராதி, அருஞ்சொல்லகராதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு திருமுறை உரை நுாலும், 1200க்கும் மேலான பக்கங்கள் கொண்டவை. 16 தொகுதிகளும், 6,000 ரூபாய் விலையில் விற்கப்படுகின்றன. எப்போதும் இவற்றின் உரை சிறப்புகள் குறித்து, வரும், 9ம் தேதி மாலை, 5:15 மணிக்கு, தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள, தருமை ஆதீனத்தின், சமய பிரசார நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மணிவிழா மண்டபத்தில், சிறப்பு சொற்பொழிவுகள் நடக்கின்றன. அதேநேரம், 1950க்கு பின், 2014ல் மறுபதிப்பு கண்ட, திருக்குறள் - உரைவளம் என்ற மூன்று தொகுதிகள் அடங்கிய நுால் வெளியீட்டு விழாவும், அன்றைய தேதியில், நடக்க உள்ளது.
திருக்குறள் - உரைவளம் நுால், அறம், பொருள், இன்பம் என்ற மூன்று தொகுதிகளை உடையது. ஒவ்வொரு குறளுக்கும், பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர் ஆகியோர் உரைகளும், சில பாடல்களுக்கு கிடைத்த தருமர், தாமத்தர், நச்சர் ஆகியோரது உரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மூன்று தொகுதிகளும், 900 ரூபாய்க்கு கிடைக்கின்றன. வரும், 9, 10 தேதிகளில் மாலை, திருமுறை சாத்திர உரைவள கருத்தரங்கு, தருமையாதீன மணிமண்டபத்தில் நடக்க உள்ளது.
தொடர்புக்கு: 94422 22419