உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்!

ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்!

கும்பகோணம் : திருநாகேஸ்வரம், ஒப்பிலியப்பன்கோவிலில், பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், ஒப்பிலியப்பன்கோவில் என்று அழைக்கப்படும் வேங்கடாசலபதி ஸ்வாமி கோவில் உள்ளது. இத்தலத்தில் பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் என, ஐந்து மூர்த்திகளாக நம்மாழ்வாருக்கு தரிசனம் தந்த வேங்கடாசலபதி பெருமாள், பக்தர்களால் ஒப்பிலியப்பன், என அழைக்கப்படுவதோடு, பூமிதேவி நாச்சியாருடன் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் தலம். இத்தலத்தில், பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பூமிதேவி, பொன்னப்பன் சிறப்பு புஷ்பலங்காரத்தில் கொடிமரம் முன் எழுந்தருளினர். தங்க கொடிமரத்திற்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று, கொடியேற்றம் நடைபெற்றது. மகாதீபாராதனையும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். விழா நாட்களில் காலை பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் பெருமாள், தாயார் வீதியுலா நடக்கிறது. 13ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை, 7.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது. 16ம் தேதி மூலவர் சன்னதியில் அன்னப்பெரும்படையல் விடையாற்றியுடன் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் அசோக்குமார், உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !