புண்ணிய பூமி ராமேஸ்வரம்!
1893 ல் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் பாரதத்தின் பெருமையையும், இந்து தர்மத்தின் பெருமையையும் வெளிக்கொண்டு வந்தவர் சுவாமி விவேகானந்தர். அடிமைப்பட்டு கிடந்த நம் நாட்டில் விடுதலை கனலை ஊட்ட முதலில் தன்னம்பிக்கையை அளித்த நிகழ்ச்சி அது. இதனைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் விவேகானந்தர் தொடர்ந்து பல உரைகளை நிகழ்த்தி பாரதத்தின் புகழை பெரிய அளவில் ஓங்க செய்தார். இந்த வெற்றிகரமான விஜயத்துக்கு பிறகு நாடு திரும்பிய சுவாமிஜி இலங்கை வழியாக பாரதம் வந்தார். 1897 ஜன., 26ல் பாம்பனில் குந்துகாலில் காலடிகளை வைத்தார். அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு செய்யப்பட்டிருந்தது.
அன்றைய ராமநாதபுரம் சமஸ்தானத்தின் சேதுபதியாக இருந்தவர் மன்னர் பாஸ்கர சேதுபதி. பாரதத்தின் பெருமையை பரப்பிய விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தாய்மண்ணைத் தொடவேண்டும் என அவர் முன் முழங்காலிட்டு அமர்ந்தார் சேதுபதி. இத்தகைய பேரன்பு சுவாமிஜியை உருக்கியது. அந்த கோரிக்கையை சுவாமிஜி ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து பாம்பனில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய விவேகானந்தர் சேதுபதியின் பங்களிப்பை விரிவாக எடுத்துரைத்தார். "உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஸ்கர சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னை கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார். இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் பாஸ்கர சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது. இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பபு அனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி. நாட்டின் உயர்விற்காக ஆன்மிக வழியில் பாடுபட இவரைப்போல் இன்னும் ஐந்தாறு மன்னர்கள் இருக்க வேண்டும்,” என அருகில் இருந்த மன்னரை சுட்டிக்காட்டி மகிழ்ந்தார் விவேகானந்தர்.
மதுரையில் மகத்தான பணிகளை செய்த வள்ளல் பாண்டித்துரை தேவரும் ராமநாதபுரத்தைச் சார்ந்தவர். அவர் பாஸ்கர சேதுபதியின் உறவினரும் கூட. சேதுபதியின் உதவியுடனும் சொந்த உழைப்பினாலும் செல்வத்தாலும் பாண்டித்துரை தேவர் செய்த பணிகள் அபாரமானவை. மதுரையில் 1901 ஆம் நாள் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் வைத்து நான்காம் தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவினார். தமிழ் அறிஞர்கள், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்ட பலர் நான்காம் தமிழ்ச் சங்க பள்ளிக்கூடத்துக்கு வந்து சொற்பொழிவாற்றினர். உ.வே.சாமிநாதய்யரின் தொண்டை அறிந்து உதவிகளை செய்தார். சிங்காரவேலு முதலியார் அவர்கள் தொகுத்த அபிதான சிந்தாமணி எனும் நூல் உருவாக காரணமாகவும் இருந்தவர் இவரே. கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை கப்பல் வாங்குவதற்காக தனிமனிதராக மிகப்பெரிய நிதி உதவி அளித்தவர் இவரே. விவேகானந்தர் வந்திறங்கிய பாம்பன் குந்துகாலில் நினைவிடம் கட்டும் ஆர்வம் மக்களிடம் உருவானது. அந்த இடம் இஸ்லாமிய சமூகத்தவரான மண்டபம் மரைக்காயர்களின் உரிமையில் இருந்தது. விவேகானந்தருக்கு நினைவு இல்லம் கட்டும் திருப்பணியில் இறங்கியது ராமகிருஷ்ண தபோவனம். இந்த அமைப்பினர் மரக்காயர்களை அணுகி நிலத்தை விலைக்குக் கேட்டனர். அவர்களும் பாஸ்கர சேதுபதியின் வழியைப் பின்பற்றி விவேகானந்தரின் நினைவு மண்டபம் கட்டிட இலவசமாகவே ஐந்து ஏக்கர் நிலத்தை அளித்தனர். ஆக இன்றைக்கும் சுவாமி விவேகானந்தரின் ராமேஸ்வரம் நினைவு இல்லம் பாரதத்தின் ஆன்மிக ஒற்றுமைக்கும் சமய எல்லைகளைத் தாண்டிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வுக்குமான எடுத்துக்காட்டாக மிளிர்கிறது. இந்த மகத்தான தியாக நிகழ்ச்சிகள், வகுப்பு ஒற்றுமையை வலியுறுத்தும் செயல்பாடுகள் ராமேஸ்வரம் வரும் ஒவ்வொரு புனித பயண யாத்திரீகருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. - சுப்பிரமணியபிள்ளை பேராசிரியர் (ஓய்வு)