உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பணி மும்முரம்!
உடுமலை : மாரியம்மன் கோவில், தேர்த் திருவிழாவின் போது அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் நடப்பதை தவிர்க்கும் பொருட்டு, கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகத்தில் மேலும் மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன; தேர் அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 24ல் துவங்கியது. திருத்தேரோட்டம், நாளை மறுநாள் (ஏப்., 9) நடக்கிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. உடுமலை நகரம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. விழா கம்பம் போடுதல், கொடியேற்றத்தை தொடர்ந்து, பூவோடு எடுத்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல் என, பக்தர்கள் தினமும் கோவில் வளாகத்தில் குவிகின்றனர். அம்மனுக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் காலை முதல் இரவு வரை, தொடர்ந்து நடக்கிறது.இதனால், பக்தர்கள் கூட்டம் இரவு வரை கோவில் வளாகத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவில் வளாகத்தில் நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா இருந்த நிலையில், தேர்த்திருவிழா முன்னிட்டு, கூடுதலாக மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவில் செயல் அலுவலர் அறையில் இவை கண்காணிக்கப்படுகின்றன.
மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சங்கரசுந்தரேசுவரன் கூறியதாவது: கோவிலின் நான்கு நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்த்திருவிழா முன்னிட்டு, கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேரோட்டத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.தேர் நிலையில் இருந்து வெளியே கொண்டுவந்து, அலங்கரிக்கப்பட்டு வருகிறது. பணி நிறைவடைந்ததும், பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கு பொதுப் பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். ஆய்வுக்குப்பின், அவர்கள் சான்றழிப்பர்.தேர் பவனி வரும் சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர் வரும் பாதையில், கோடு போடப்பட்டுள்ளது. இந்த கோட்டுக்குள்தான் தேர் இழுத்து வரப்படும். இத்துடன், தேருக்கும், தேருக்கு கட்டை கொடுப்பவர்களுக்குமாக 21 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. குட்டைத்திடல், கோவில் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் தரப்பில், தேரோட்டம் நடக்கும் பாதைகள், மக்கள் அதிகம் வரும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில், பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகள் ஒலிபெருக்கியில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தேரை பக்தர்கள் இழுக்கும்போது, பின்புறம் இருந்து தள்ள, கேரள மாநிலம், செர்புலசேரியை சேர்ந்த சேகரன், 50 என்ற யானை வரவழைக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.