திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை திருவிழா!
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கிருத்திகை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை தரிசிக்க மூன்று மணி நேரம் காத்திருந்தனர். திருத்தணி முருகன் கோவிலில், மாதந்தோறும் நடைபெறும் கிருத்திகை விழாவில் பக்தர்கள் பலர் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து தங்களது நேர்த்தி கடனை தீர்ப்பர். மேலும், அதிகளவில் பக்தர்கள் வந்திருந்து மூலவரை தரிசிப்பர். நேற்று நடந்த ஆனி கிருத்திகை விழாவில் தமிழகம், ஆந்திரம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். சில பக்தர்கள் மொட்டை அடித்து சரவண பொய்கையில், புனித நீராடி பக்தி பாடல்கள் பாடிய வண்ணம் மலைப்படிகள் வழியாக நடந்து சென்று, மூலவரை தரிசித்தனர். அடுத்த மாதம் 25ம் தேதி ஆடி கிருத்திகையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவர் என்பதால், சுவாமியை தரிசிக்க அவதிப்பட நேரிடும் என, நேற்று நடந்த கிருத்திகை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலைக்கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கவிதா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.