தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவருடைய பெருமை
ADDED :3897 days ago
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்
பேசுகா யத்தி ரிதனைப்
பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்
பெரியமனு முறைசெ பிப்பார்
பிரமன்மால் அரனையுநி தம்பிரா ணாயாம
பேத ரேசக பூரகப்
பிடுதரு கும்பகா திச்செயலில் நின்றுளப்
பிரபையாற் கண்டு மகிழ்வார்
இருபொழுது வேள்விசெய்து அமரர்க்கும் மூவர்க்கும்
ஈந்திடுவர் அவியு ணவினை
என்றும்அறு தொழில்விடார் மன்றில்நடம் இடும் உன்னை
எழிலுறப் பூசை புரிவார்
திருமருவு சுந்தரன் தமிழடிமுன் நீசொன்ன
செல்வர் மகிமைக் களவிலை
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.