திருத்தணி முருகன் கோவிலில் 1,008 பால்குட ஊர்வலம்!
திருத்தணி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், 1,008 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு தரிசனம் நேற்று நடந்தன. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காலை 8:50 மணிக்கு, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள, கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து, 1,008 பால்குட ஊர்வலம் துவங்கி, மலை கோவிலில் உள்ள, காவடி மண்டபத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து, பிற்பகல் 12:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. இரவு 7:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், தங்கத்தேரில் எழுந்தருளி, மாடவீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பொதுவழியில், ஐந்து மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர்.
மாடவீதியில் ஆறாக ஓடிய பால்: காவடி மண்டபத்தில் அபிஷேக நீர் வெளியேற தனி குழாய் உள்ளது. நேற்று அங்கு, உற்சவருக்கு, பால் அபிஷேகம் நடந்தபோது, குழாய் உடைந்திருந்ததால், பால், கோவில் மாட வீதியில் வெளியேறி ஆறாக ஓடியது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த பால் என்பதால், பக்தர்கள் அதை மிதிக்காமல் செல்ல, சிரமப்பட்டனர். ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், மாடவீதியில் வழிந்தோடிய பாலை, பாத்திரங்கள் மூலம் சேகரித்து, மலைப்பகுதியில் உள்ள, தனி இடத்தில் ஊற்றினர்.