சின்னம்மன் - பெரியம்மன் கோவிலில் திருப்பணி!
அன்னுார் : அன்னுாரில், 1,300 ஆண்டு பழமையான சின்னம்மன், பெரியம்மன் கோவிலில் திருப்பணி நடக்கிறது.
சோழ மன்னர் கரிகாலன், கொங்கு நாட்டுக்கு வந்து இருளர்கள் துணையோடு, கரூர் முதல் முட்டம் வரை, ஏழு சிவாலயங்கள், 36 பெரிய கோவில்கள், 360 சிறு கோவில்களை கட்டி திருப்பணி செய்தார். சேரமானுடன் நட்பு ஏற்பட்டு, சோழன் மகளுக்கும், சேரன் மகனுக்கும் திருமணம் நடந்தது.சேரன், சோழன் இணைந்து, திருமலை என்கிறவரை நியமித்து, அன்னியூர் (அன்னுார்) கோட்டை நகரை ஸ்தாபித்தனர். கோட்டை நகருக்கு வனதுர்க்கைகளாக பெரியம்மன், சின்னம்மன் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்து, பல ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்களை மானியமாக வழங்கினர். ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடத்தவும் அறிவுறுத்தினர். இத்தகவல்கள் அனைத்து ஓலைச்சுவடிகளான சோழன் பூர்வ பட்டயத்தில் உள்ளது. தற்போது கோவிலில் உள்ள கல் விக்ரகங்கள், 1,300 ஆண்டுகள் ஆனவை.
பல்வேறு காரணங்களால் கோவிலில் திருவிழாக்கள் பெரிதாக நடத்தப்படாமல், போனது. கோவிலுக்கு சொந்தமாக, 18 ஏக்கர் நிலம் உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பிரிவினருக்கு குலதெய்வமாக உள்ளது.இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை வசம் வந்த இக்கோவிலில், திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு மூன்று நிலை கோபுரம் மற்றும் முன் மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆறு மாதங்களுக்குள் பணி முடித்து, கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.