உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை குளத்தில் கெமிக்கல் கழிவு கலப்பு: பக்தர்கள் வேதனை!

சிவகங்கை குளத்தில் கெமிக்கல் கழிவு கலப்பு: பக்தர்கள் வேதனை!

சிதம்பரம்: நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் கோவிலில் சுத்தம் செய்யும் அழுக்குகள், ரசாயனம் போன்றவை கலந்து மாசு அடைந்துள்ளதால்  பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளம், காசி கங்கை புண்ணிய நதிக்கு நிகரானது. இந்த  தீர்த்த குளத்தில் நடராஜ பெருமான் பக்தர்களுக்கு தீர்த்தவாரி அளிப்பது சிறப்பு. வரும் 1ம் தேதி நடைபெற உள்ள நடராஜர் கோவில் கும்பாபிஷேகத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் சுவர்கள், ஆயிரங்கால் மண்டபம்  போன்றவை சுத்தம் செய்யும் அழுக்கு தண்ணீர் சிவகங்கை குளத்தில் கலக்கிறது. மேலும் கோபுரம், மதில் சுவர், கருங்கல் தூண்கள், சிலைகள் போன்றவைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் (கெமிக்கல்) பெயிண்ட் போன்ற கழிவுகள் கலப்பதால் தண்ணீர் மாசு அடைந்துள்ளது.தீர்த்த குளத்தில் கழிவுகள் கலந்து அதன் அழுக்குகள் அடுக்கடுக்காக குளத்தின் கிழக்கு பகுதியில் அதிக அளவில் மிதக்கிறது. மேலும், தண்ணீர்  தடிமன் ஏற்பட்டு கரும் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்த குளமான சிவகங்கை குளத்தில்  இறங்க அச்சம் அடைந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சுகாதார அதிகாரிகள் மூலம் சிவகங்கை குளத்து தண்ணீரை ஆய்வு செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !