உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதிக்கு தினசரி ரயில் பக்தர்கள் கோரிக்கை

திருப்பதிக்கு தினசரி ரயில் பக்தர்கள் கோரிக்கை

திருப்பூர் : கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக ராமேஸ்வரம், திருப்பதி செல்லும் வாராந்திர ரயிலை, தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2012ல், கோவையில் இருந்து திருப்பதிக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய நான்கு தினங்கள், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக திருப்பதிக்கு கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. காலை 5:50 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், அன்றைய தினம் மதியம் 2:30க்கு திருப்பதி சென்றடையும். வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய மூன்று நாட்கள் ரயில் கிடையாது. அந்த நாட்களில், திருப்பதி வழியாக செல்லும், சபரி எக்ஸ்பிரஸ், மும்பை சி.எஸ்.டி., கேரளா எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க வேண்டிய சிரமம் பக்தர்களுக்கு ஏற்படுகிறது.

திருவனந்தபுரம், கோட்டயம், ஒட்டப்பாலம் பகுதியில் இருந்தே அதிக கூட்டத்துடன் வரும் சபரி எக்ஸ்பிரஸ், ரேணிகுண்டா, மந்தராலயம், நாக்பூர், புனே, கராச்சி வழியாக மும்பை தாதர் வரை செல்வதால், மேற்கண்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும். இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளில் பயணிகளுக்கு இடமில்லாத நிலை ஏற்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை 7:45 க்கு கோவையில் புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன் வழியாக காலை 6:30 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறது. மறுமார்க்கமாக, புதன் இரவு புறப்பட்டு வியாழன் காலை, கோவையை அடைகிறது.

புண்ணிய ஸ்தலமாக உள்ள ராமேஸ்வரத்துக்கு, வாரத்தின் ஒரு நாள் மட்டுமே மேற்கு மண்டலத்தில் இருந்து ரயில் உள்ளது. திருப்பூர், கோவை, ஈரோட்டில் இருந்து செல்ல வேண்டுமெனில் மதுரை சென்று, வேறு ரயில் மாறி செல்ல வேண்டியுள்ளது. எனவே, பிரசித்தி பெற்ற திருப்பதி மற்றும் ராமேஸ்வரத்துக்கு, கோவையில் இருந்து செல்லும் ரயில்களை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !