ஹரே ராமா கோஷம் முழங்க திருப்புல்லாணியில் தேரோட்டம்!
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த மாதம் ஏப்., 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, பட்டாபிஷேக ராமர் உள்ளிட்ட சுவாமிக்கு தினமும் இருவேளை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 10 மணியளவில் தேரோட்டம் நடந்தது. சீதாபிராட்டியார், பட்டாபிஷேக ராமர், லட்சுமணர், அனுமன் உற்சவ மூர்த்திகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் "ஹரே ராமா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுக்க கோயிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் தேர் வலம் வந்தது. நிறைவாக தீர்த்தம் தெளிக்கப்பட்டு, பக்தர்கள் கூட்டத்தில் கனிகள் வீசும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (மே4) காலை 9 மணிக்கு ஆதிஜெகநாதப் பெருமாளும், பட்டாபிஷேக ராமரும் சேதுக்கரைக்கு சென்று தீர்த்தவாரி பூஜையில் பங்கேற்கின்றனர். பின்னர் கருட, ஆஞ்சநேய வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவில் சந்திரபிரபை வாகனத்தில் வீதியு லாவும் நடைபெறும். திவான் மகேந்திரன், சரக அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன், ஊராட்சி தலைவர் முனியசாமி, தாதனேந்தல் ஊராட்சி தலைவர் புல்லாணி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.