அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் கிரிவலம்: பக்தர் வழிபாடு!
திருச்செங்கோடு : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நடந்த கிரிவலத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். திருச்செங்கோடு அர்த்நாரீஸ்வரர் மலைக்கோவில், வரலாற்று சிறப்பும், இதிகாசம் மற்றும் புராண சிறப்பும் கொண்ட ஸ்தலமாகும். தீர்த்தம், மூர்த்தி ஆகிய சிறப்புகளையும் கொண்டது. இங்கு, அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.மலைக்கோவிலில், ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்வாமியை வழிபட்டு செல்வது வழக்கம். கிரிவலப்பாதை, ஆறு கி.மீ., தூரம் கொண்டது. கிரிவலம் செல்லும் பக்தர்கள், ஆறுமுக ஸ்வாமி கோவிலில் துவங்கி, பெரிய ஓங்காளியம்மன் கோவில், நாமக்கல் சாலை, மலைசுத்தி சாலை, வாலரைகேட், ப.வேலூர் சாலை, சின்ன ஓங்காளியம்மன் கோவில், தெற்கு ரதவீதி வழியாக மீண்டும் ஆறுமுக ஸ்வாமி கோவிலை வந்தடைவர்.
ஆறு கி.மீ., கிரிவலப்பாதையில் உள்ள பல்வேறு கோவில்களில், பக்தர்களுக்கு சுக்கு காப்பி, பழங்கள், ஜூஸ், பொங்கல், புளியோதரை, லெமன் மற்றும் தேங்காய் சாதம் உள்ளிட்ட கலவை சாதங்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில், பிரசாதமாக வழங்கப்பட்டது.அதில், நாமக்கல், ஈரோடு, சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கிரிவலம் சென்று ஸ்வாமியை வழிபட்டனர்.
* நாமக்கல் அடுத்த, புதன்சந்தை சிவன்மலையில் உள்ள கடம்பலேஸ்வரர் கோவிலில், மூலவருக்கு தீர்த்த நீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, கோவிலில் உள்ள கணபதி, முருகன், இடும்பன், சின்னண்ணன், பெரியண்ணன், கருமாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பூஜை செய்யப்பட்டது.மாலை, 6 மணிக்கு, மலையை சுற்றி, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.