உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவப் பெருமாள் கோவிலில் பரவசப்படுத்திய கஜமோட்சம்!

வீரராகவப் பெருமாள் கோவிலில் பரவசப்படுத்திய கஜமோட்சம்!

திருப்பூர் : முதலையிடம் இருந்து யானையை எம்பெருமான் காப்பாற்றிய, "கஜமோட்சம் நிகழ்ச்சி, திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் நேற்று தத்ரூபமாக நடந்தது. எம்பெருமானுக்கு தினமும் குளத்தில் இருந்து தாமரை பறித்துச் சென்று வழிபட்டு வந்த யானையை, முதலை கவ்வ முயற்சித்தது. யானை வேண்டுதலை ஏற்று, பெருமாள் தோன்றி காப்பாற்றி, மோட்சம் அளித்ததாகவும், சித்ரா பவுர்ணமியன்று இந்நிகழ்வு நடந்ததாகவும் புராணத்தில் உள்ளது.நேற்றிரவு, இந்நிகழ்ச்சி திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் நடந்தது. குளத்தில் யானை தாமரை பறித்துக் கொண்டிருந்தது போலவும், முதலை யானை காலை கவ்வுவது; பெருமானை நோக்கி யானை பிளிறுவது; கருடாழ்வார் மீது எம்பெருமான் எழுந்தருளும் காட்சிகள், தத்ரூபமாக செய்து காட்டப்பட்டன. முன்னதாக, கருட வாகனத்தில் எழுந்தருளிய எம்பெருமான் வீதி உலா வந்து, தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட யானை ராணி, பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. கஜமோட்சம் குறித்து பட்டாச்சார்யார்கள் விளக்கினர். பின், ஏகாந்த சேவை, பிரசாத வினியோகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை மற்றும் அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !