3,000 ஆண்டு பழமையான கோயிலில் முதல் முறையாக தெப்பத்திருவிழா!
கீழக்கரை: மூவாயிரம் ஆண்டு பழமையான உத்திரகோசமங்கை கோயிலில் முதல்முறையாக தெப்பத்திருவிழா நடந்தது உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சுவாமி கோயில் மாணிக்க வாசகரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாக புராண வரலாறு கொண்ட இக்கோயிலில், முதன்முறையாக நேற்று முன்தினம் இரவு தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி கோயிலில் உள்ள அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் 50 அடி உயரம் கொண்ட தெப்பம் அமைக்கப்பட்டு, இரவு 7 மணியளவில் ராஜமரியாதையுடன் மூலவரை அழைக்கும் அனுக்ஞை பூஜை நடந்தது. பின்னர் பிரியாவிடையுடன் மங்களநாயகி சமேதராக மங்களநாத சுவாமி சயனக்கோலத்தில் அக்னி தீர்த்தக்குளம் தெப்பத்தில் எழுந்தருளினார். வேத பாராயணம், கைலாச வாத்தியங்கள், மாணிக்கவாசகர் பாடி அருளிய திருபொன்னுஞ்சல் ஆகியவை பாடப்பட்டன. தெப்பத்தில் 11 முறை வலம் வந்த சுவாமியை திரண்டிருந்த பக்தர்கள்,சிவ நாம கோஷங்கள் முழங்க, தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் சமஸ்தான தேவஸ்தான திவான் மகேந்திரன், சரக அலுவலர் சுவாமிநாதன், சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ்ராஜா, பேஷ்கார் ஸ்ரீதர், ஊராட்சி தலைவர் நாகராஜன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சிவஸ்ரீ ராஜலிங்க குருக்கள் செய்திருந்தார். விழா துளிகள்: *சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் பக்தர்களால் சிரமத்திற்குள்ளாகினர். * தெப்பம் மின்னொளியில் ஜொலித்தாலும், அக்னி தெப்பக்குளத்தின் நான்கு புறமும் இருளாக இருந்தது.