மாசான பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில் கோலாகலம்
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் மாசான பத்திராகாளியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தீ மிதித்தனர். சத்தியமங்கலம், கோட்டுவீராம்பாளையத்தில் உள்ளது மாசான பத்திராகாளியம்மன் கோவில்.ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம், இந்த கோவிலில் குண்டம் விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டின் குண்டம் விழா, கடந்த மாதம், 20ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது.நேற்று முன்தினம் இரவு, பவானி ஆற்றில் இருந்து திருமஞ்சன தீர்த்தம் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. நேற்று அதிகாலை, அம்மன் அழைத்து வரம் பெறப்பட்டது. நேற்று காலை, ஆறு மணிக்கு கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் நகராட்சி தலைவர் சுப்பிரமணியம் உட்பட பக்தர்கள் தீ மிதித்து, தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். இரவு, 10 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது.இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், மாலை புஷ்ப பல்லாக்கு மற்றும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.வரும், 11ம் தேதி மறுபூஜையுடன், இந்த ஆண்டு குண்டம் விழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.