உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டுமாரியம்மன் கோவில் குண்டம் விழா உற்சாகம்

தண்டுமாரியம்மன் கோவில் குண்டம் விழா உற்சாகம்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கியவுடன், கால்நடைகள் குண்டம் இறங்கியது. சத்தியமங்கலம், வடக்குபேட்டையில் உள்ளது தண்டுமாரியம்மன் கோவில். 100 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் உள்ள அம்மன், பண்ணாரி மாரியம்மனின் சகோதரி என்று கூறுகின்றனர். இதனால் பண்ணாரி கோவிலில் குண்டம் விழா முடிந்த அடுத்த மாதம், தண்டுமாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடப்பது வழக்கம்.இதன்படி, இந்த ஆண்டு பண்ணாரி குண்டம் விழாவுக்கு பின், இக்கோவிலில் கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்தை சுற்றிலும் நாள்தோறும், இரவு, எட்டு முதல், 11 மணி வரை, சத்தியமங்கலம் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள இளைஞர்கள் வரிசையாக கம்பத்தை சுற்றி, இசை கலைஞர்களின் மேள, தாளத்துக்கேற்ப, சலங்கைகள் கட்டி நடனமாடினர். நேற்று அதிகாலை, கோவில் முன் அமைக்கப்பட்ட தீ குண்டத்தில், பூசாரி சிவசங்கர், குண்டத்துக்கு பூஜை செய்து, தீ மிதித்தார். இவரை தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் என பக்தர்கள் குண்டம் இறங்கி, வேண்டுதலை நிறைவு செய்தனர். பெண் பக்தர்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் ஆடைகள் உடுத்தி, கையில் வேப்பிலையுடன், குண்டம் இறங்கினர். பக்தர்களுகளுக்கு பிறகு, கால்நடைகளை தீ குண்டத்தில் இறங்க செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !