3 ஆயிரம் அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்!
மதுரை : சுயநலம் பெருகி வரும் இக் காலத்தில், பசியுடன் ஒருவர் கூட இவ்விடத்தை விட்டுச் செல்லக்கூடாது, என்ற உயர்வான சிந்தனையுடன் செயல்பட்டு வருகின்றது காளிமுத்து சுவாமிகள் அன்னதான மடம்.இந்த மடம் அமைந்திருப்பது வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சதுரகிரி மலையில் தான். மூன்றாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயில் அருகில் 1976ல் காளிமுத்து சுவாமிகள் இந்த அன்னதான மடத்தை துவக்கினார். அது முதல் இன்று வரை தினமும் 3 வேளை இங்கு அன்னதானம் நடக்கிறது, என்பது தான் ஆச்சரியமான விஷயம்.காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுடச்சுட சோறு, சாம்பார், ரசம், கூட்டு, பாயாசம் அன்னதானம் வழங்கப்படுகிறது. சாதாரண நாட்கள், விசேஷ நாட்கள் என்ற பாகுபாடு இல்லை. இந்த மலையில் உள்ள கோயில்களுக்கு பகல், இரவு என எப்போதும் பக்தர்கள் வந்து செல்வர். பசித்து வருபவர்களுக்கு உணவு வழங்குவதை தலையாய கடமையாக கொண்டுள்ளனர். இரவு 8 மணிக்கு பின் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு சாப்பாடு இல்லை எனக் கூறாமல் உடனே அடுப்பை பற்றவைத்து உப்புமா கொடுத்து அவர்களின் பசியை போக்கி விடுகின்றனர். இந்த அன்னதான மடத்தில் 4 சமையல் மாஸ்டர்கள், 10 சப்ளையர்கள் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். தண்ணீரை தவிர அனைத்து பொருட்களையும் மலையில் கீழ் இருந்து சுமையாளர்கள் மூலம் எடுத்து வருகின்றனர். அன்னதானம் மட்டுமின்றி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இலவசமாக தங்க இடம், விரிப்பு மற்றும் பாய் கொடுக்கின்றனர். பக்தர்கள் விரும்பினால் மட்டும் காணிக்கை கொடுக்கலாம். "ஸ்ரீ காளிமுத்து சுவாமி சேரிட்டபிள் டிரஸ்ட் மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த அன்னதான மடத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பக்தர்கள் எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் நாங்கள் அத்தனை பேருக்கும் உணவு கொடுப்போம். பக்தர்கள் அதிகம் வரவேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து சாப்பிடலாம். வரும் ஆடி அமாவாசை நாளில் லட்சம் பேருக்கு கூழ் வழங்க உள்ளோம், என்றார். சதுரகிரியில் அன்னதானம் வழங்கும் பல மடங்கள் உள்ளன. இவை விசேஷ நாட்களில் மட்டுமே அன்னதானம் செய்கின்றன. உணவருந்த எங்கள் மடத்திற்கு வாருங்கள் என்ற அழைப்புகளை சதுரகிரியை தவிர வேறு எங்கும் கேட்க முடியாது, என்பது உண்மையே.
அடிப்படை வசதிகளுக்கு பக்தர்கள் எதிர்பார்ப்பு: சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆடி அமாவாசை விழா இம்மாத இறுதியில் நடக்கும் நிலையில், அடிப்படை வசதிகளை செய்ய அறநிலைய துறை முன்வர வேண்டும். விழாவை முன்னிட்டு தற்போதே பக்தர்கள் அதிகளவில் வந்துசெல்கின்றனர். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. கழிப்பறை: கோயில் பகுதியில் 63 ஏக்கர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கழிப்பறை வசதிகள் இல்லாததால் பெண்கள் அவதிக்குள்ளாகின்றனர். கோயில் சார்பில் அமைக்கப் பட்ட கழிப்பறை பராமரிப்பின்றி புதர்கள் மண்டி கிடக்கிறது. வி.ஐ.பி.,க்கள் வந்தாலும் அவர்களும் காட்டுக்குள் செல்லும் பரிதாப நிலை. உடைமாற்றும் அறை: கோயிலுக்கு பக்தர்கள் எட்டு கி.மீ., மலைப்பயணம் செய்கின்றனர். இங்கு நீராடுவதை புனிதமாக கருதுகின்றனர். தண்ணீர் தொட்டியை ஆண்கள் ஆக்கிரமிப்பதால், பெண்கள் நீராட சிரமப்படுகின்றனர். உடைகளை மாற்றவும் அவர்களுக்கு அறைகள் இல்லை.
மருத்துவ வசதி: விழாவிற்காக எழுமலை, சாப்டூர், பேரையூர் அரசு மருத்துவமனைகள் சார்பில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். கோயில் வளாகத்தில் நிரந்தரமாக ஒரு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். நிரந்தர பாதை: வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறையில் இருந்து கோயில் செல்ல வனத்துறை மூன்று அடி அகலத்தில் பாதை அமைத்துள்ளது. எழுமலை அருகே வாழைத்தோப்பு வழியாகவும், தேனி மாவட்டம் மயிலாடும்பாறை வழியாக வரும் பாதை ஒற்றையடி பாதையாகவும், வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியாக உள்ளது. தாணிப்பாறைவழியாக கோயிலுக்கு செல்லும்பாதையில் நிரந்தர படிக்கட்டுகள் மற்றும் ஆபத்தான இடங்களில் கம்பி தடுப்புகள் இல்லாததால் முதியோர் தடுமாறுகின்றனர்.
குடிநீர்: குடிநீர்வசதி இல்லாததால், பாட்டில்களிலும், பாலித்தீன் பையில் உள்ள குடிநீரை எடுத்து வரும் பக்தர்கள் ஆங்காங்கே வீசி செல்கின்றனர். சுற்றுச்சூழல் கெடுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பயணம் செய்வதால் களைப்படைகின்றனர். சிலர் இரவு தங்குகின்றனர். அறநிலையத்துறை விடுதிகள் அமைக்க வேண்டும். மொட்டை போட ரூ.பத்து கட்டணம். ஆனால் ரூ.100 சேர்த்து கொடுத்தால் தான் மொட்டையடிக்கின்றனர். தவமணி குரு, பக்தர்: இங்கு உள்ள மடங்களில் அன்னதானம் வழங்க படுகிறது. வெளியூர் பக்தர்கள் கழிப்பறை வசதி இல்லாததால், சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். சபரிமலையில் பல வசதிகள்செய்யப்பட்டுள்ளன.அத்தகைய வசதிகளை இங்கும் செய்ய வேண்டும்.
ஆறுமுக பெருமாள், பக்தர்: பக்தர்களுக்கு தேவையான குடிநீரை மலையில் மேல்பகுதியில் இருந்து குழாய்கள் மூலம் கீழ்பகுதி வரை சப்ளை செய்தால், பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு குறையும். குப்பைகள் போட தனிகூடைகள் அமைக்க வேண்டும். பாதுகாப்புக்கு கூடுதல் போலீசாரை நியமிக்கவேண்டும்.