புரி ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
புரி : ஒடிசா மாநிலம் புரி ஜகன்னாதர் கோவிலில், நேற்று ரத யாத்திரை கோலாகலமாக நடந்தது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஒடிசா மாநிலம், புரியில் உள்ள ஜகன்னாதர் கோவில் கி.பி., 11ம் நூற்றாண்டில், தமிழகத்தை ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனின் உறவினர், அனந்தவர்மன் சோடகங்க தேவன் என்பவனால் கட்டப்பட்டது. இக்கோவிலில், ஜகன்னாதர் என்ற கிருஷ்ணர், அவரது மூத்த சகோதரர் பலராமர், இவர்களின் சகோதரி சுபத்திரை ஆகிய மூன்று பேருக்கும் நடக்கும் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. இந்தாண்டுக்கான ரத யாத்திரை நேற்று நடந்தது. கடந்த சில நாட்களாக, இந்த ரத யாத்திரையில் கலந்து கொள்வதற்காக, லட்சக்கணக்கான மக்கள் புரியில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
ஜகன்னாதர் கோவிலின் வெளிப்புறத்தில் இருந்து புறப்பட்ட மூன்று தேர்கள், அங்கிருந்து மூன்று கி.மீ., தூரத்தில் உள்ள மற்றொரு கோவிலுக்கு இழுத்துச் செல்லப்பட்டன. அங்கு ஒன்பது நாட்கள், ஜகன்னாதர், பலராமர், சுபத்திரை விக்கிரகங்கள் வைக்கப்பட்டு வழிபடப்படும். தேர் புறப்படும் முன், தங்கத் துடைப்பத்தால் தேர் செல்லும் வழியைத் தூய்மை செய்யும் பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது. செல்லும் வழியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மங்கள ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில், மாநில கவர்னர் எம்.சி.பண்டாரே, முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர் செல்லும் பகுதிகளில் திரண்டிருந்த மக்கள், அதிக வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, குழாய்கள் மூலம் கூட்டத்தின் மீது, குளிர்ந்த நீர் தெளிக்கப்பட்டது. ஒவ்வொரு தேரைச் சுற்றியும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதுதவிர, புரி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
குஜராத்தில் ரத யாத்திரை: குஜராத் மாநிலம் ஜமால்பூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஜகன்னாதர் கோவிலிலும், 134வது ரத யாத்திரை நேற்று பலத்த பாதுகாப்புடன் கோலாகலமாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். புரி ஜகன்னாதர் கோவிலில் ரத யாத்திரை நடக்கும் தினத்தன்று, ஜமால்பூரிலும் ரத யாத்திரை நடக்கும்.ரத யாத்திரைக்கு முன்பாக, பாரம்பரியப்படி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ரதம் செல்லும் பாதையை துடைப்பத்தால் சுத்தம் செய்தார். அதன் பின் ரத யாத்திரை துவங்கியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோடி,"ஜகன்னாதரின் அருளால் இந்த நாடும், குஜராத் மாநிலமும் வளம் பெற வேண்டும். இதே போல் ரத யாத்திரை, மாநிலத்தில் 110 இடங்களில் நடக்கிறது. ஆமதாபாத்தில் நடக்கும் இந்த யாத்திரை தான் மிகப் பழமையானது என்றார். ஜகன்னாதர், பலராமர், சுபத்திரை ஆகியோரது மூன்று தேர்களுக்கு முன்னால், அலங்கரிக்கப்பட்ட 19 யானைகள், 98 வண்டிகள் சென்றன. விழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.இந்த விழாவுக்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 36 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.