உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்மநாப சுவாமி கோவிலில் கிடைத்த 90 ஆயிரம் கோடி ரூபாய் பொக்கிஷம்!

பத்மநாப சுவாமி கோவிலில் கிடைத்த 90 ஆயிரம் கோடி ரூபாய் பொக்கிஷம்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில், விலை மதிப்பிட முடியாத, காலத்தால் பழமையான பொருட்கள், மூன்று அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பே, 90 ஆயிரம் கோடி ரூபாய். இதுவரை கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள், கோவில் வசமே இருக்க வேண்டும் என வரலாற்று அறிஞர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பொக்கிஷத்தை எப்படிஇனி பாதுகாப்பது என அவர்கள் கவலை தெரிவித்தனர். பத்மநாப சுவாமி கோவில், தற்போது திருவிதாங்கூர் அரச குடும்பத்திடம் உள்ளது. கோவில் நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என டி.பி.சுந்தரராஜன் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு வழக்கு தொடுத்தார்.இவ்வழக்கின் எதிரொலியாக, கோவிலின் ஆறு பாதாள அறைகளை திறந்து பரிசோதிக்கும்படி, ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எம்.என். கிருஷ்ணன் தலைமையிலான இக்குழு, கடந்த 27ம் தேதி, அறைகளை திறக்கத் துவங்கியது.இதுவரை மூன்று அறைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1ம் தேதி, திறக்கப்பட்ட அறையில் இருந்த பொருட்களின் பட்டியல், 2ம் தேதி தயாரானது. இன்னும் முழுமையான அளவில் பொக்கிஷம் குறித்த கணக்கெடுப்பு முடியவில்லை.

பொக்கிஷம்திறக்கப்பட்ட மூன்று அறைகளில் உள்ளவற்றின் மதிப்பு மட்டுமே இன்றைய நிலையில், 90 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நான்கடி உயரமுள்ள, தங்கத்தால் ஆன விஷ்ணு சிலை மற்றும் பல்வேறு சிலைகள், 18 அடி நீள தங்க மாலை என, காலத்தால் மதிப்பிட முடியாத பழமையான பொருட்கள் இந்த அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.அதே நேரம், திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய விஜயநகரப் பேரரசுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பால், விஜயநகர காலத்து நாணயங்களும் இந்த அறைகளில் கிடைத்துள்ளன. இவை, வரலாற்று அறிஞர்களால் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன.அறைகள் திறக்கப்படுவதற்கு முன் பேட்டியளித்த குழுத் தலைவர் முன்னாள் நீதிபதி கிருஷ்ணன், இப்பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிந்து விடும் என நம்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதைய நிலையில் இப்பணி மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது.

மன்னர் குடும்பத்து எளிமை : இந்தியாவில் அரச குடும்பங்களின் பராமரிப்பில் இருந்த கோவில் செல்வங்கள் அன்னியரால் கொள்ளையடிக்கப்பட்டதும், பல்வேறு வழிகளில் அக்குடும்பங்களால் செலவழிக்கப்பட்டதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ள இந்த அறைகளில் இருந்து ஒரு குண்டுமணி அளவுகூட காணாமல் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு, பத்மநாப சுவாமி மீது அரச குடும்பம் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி தான் காரணம் என, மக்கள் கருதுகின்றனர்.கி.பி., 13ம் நூற்றாண்டில், மாலிக்கபூர் படையெடுப்பு நடந்த போது, பாண்டிய மன்னராக இருந்த வீரபாண்டியன் வலுவற்று தோல்வி அடைந்ததால், கோவில்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.

பாதுகாப்பு எவ்வாறு?பிரிட்டிஷ் ஆட்சி முடிந்த பின்பு, மாநில மற்றும் மத்திய அரசுகளின் கைகளுக்கு வந்த பல்வேறு கோவில்களில் இருந்த அளப்பரிய செல்வங்கள் அனைத்தும் அரசின் கைகளுக்கே சென்றதும், அதன் பின் அவை பற்றிய தகவல்களே கிடைக்காததும், அல்லது அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டமையும் தான் அறிஞர்களின் கவலைக்கு காரணங்களாக கூறப்படுகின்றன. இதுகுறித்து, இந்திய வரலாற்று காங்கிரஸ் தலைவர் நாராயணன் கூறியதாவது:இந்தச் செல்வங்களை, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கக் கூடாது. இவை அனைத்தும் பழைய நிர்வாக முறைப்படி திருவிதாங்கூர் அரச குடும்பத்தாலேயே கோவிலில் பாதுகாக்கப்பட வேண்டும்.அரசுகளால் எடுக்கப்பட்ட கோவில்களில் இருந்த செல்வங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதும், மோசடி செய்யப்பட்டதும் நாம் அறிவோம். அது போன்ற சம்பவங்கள் இந்தக் கோவிலில் நடக்கக் கூடாது.கோவிலிலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அதில் சில முக்கியமான பொருட்களை மட்டும் காட்சிக்கு வைத்து விட்டு, மற்றவற்றை ரகசிய அறைகளில் வைத்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் தெரிவித்தார்.

வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளரான எம்.ஜி.சசிபூஷண், "வருங்கால தலைமுறைக்கும் இவை பற்றிய தகவல்கள் சேர வேண்டுமானால் இவை அனைத்தும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். அதேபோல், வி.எச்.பி., நாயர் சர்வீஸ் சொசைட்டி, நாராயண தர்ம பரிபாலன யோகம் போன்ற அமைப்புகள், இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மத்திய அல்லது மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இவற்றை கோவில் சொத்துகள் என அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.இதனிடையே, நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பற்றி கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை என்று, மன்னர் வாரிசான உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா நேற்று தெரிவித்தார்.

மக்களை ஈர்க்கும் கோவில்:

* கி.பி., 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார் இக்கோவிலைப் பாடியுள்ளார்.
*தமிழகம் மற்றும் கேரள கட்டடக் கலைகள் இணைந்த கோவில் இது.
*கி.பி., 1686ல் இக்கோவில் முழுவதும் தீக்கிரையானதால், அப்போதைய மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் புதுப்பிக்கப்பட்டது.
*மரத்தால் ஆன மூலவர் விக்ரகம் தீயில் சேதம் அடைந்ததால், 12 ஆயிரம் சாளக்கிராமக் கற்கள் மற்றும் கடுசர்க்கரையால் மூலவர் புதிதாக உருவாக்கப்பட்டார்.
*திருவிதாங்கூர் சம்ஸ்தானத்திற்கு தலைவர் பத்மநாப சுவாமி தான் என்பதால் அவருக்கு, பிரிட்டிஷ் ஆட்சியில், 21 குண்டுகள் முழக்கி மரியாதை செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவில் மன்னர் மானிய ஒழிப்பு வரும் வரை இந்த மரியாதை நீடித்தது.
*பிரிட்டிஷ் ஆட்சியில், அப்போதைய மன்னர் சித்திரைத் திருநாள், "ராஜப்ரமுக் (கவர்னர்) என்று பட்டம் சூட்டப்பட்ட போதும் கூட, அவர் கோவில் சொத்துகளை முறையாகவே பராமரித்து வந்தார்.
*நீண்ட காலமாக மன்னர்கள், மக்களுக்கு விதிக்கும் அபராதம் இக்கோவிலில் தங்க ஆபரணங்களாகச் சேர்க்கப்படுவது வழக்கம். கோவில் பொருளை எவரும் திருட முற்பட்டதில்லை என்பதும் இங்கேயுள்ள தனிச்சிறப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !