கரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்
பொன்னேரி: அருள்மிகு கரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். பொன்னேரி அருள்மிகு சவுந்தர்ய வள்ளி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளான நேற்று, தேர்த்திருவிழா நடந்தது. வண்ணமிக பூக்கள் மற்றும் துணிகளால் அலங்கரிக்கப்பட்ட, 36 அடி மரத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவ பெருமான் அருள்மிகு கரிகிருஷ்ண பெருமாள் வீற்றிருந்தார். காலை, 9:00 மணிக்கு, நிலையில் இருந்து புறப்பட்ட தேர் புதிய தேரடி தெரு, தாயுமான் செட்டி தெரு, நீலி அப்பாதுரை தெரு, தண்டபாணி தெரு ஆகிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. பொன்னேரி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரினை வடம் பிடித்து இழுத்து, பெருமாளை வழிபட்டனர். மாடவீதிகள் சுற்றி வந்த திருத்தேர் மாலையில், ஹரஹரன் பஜார் வழியாக தேரடியின் நிலையை அடைந்தது.