அம்மச்சார் அம்மன் தேர்திருவிழா!
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். செஞ்சி தாலுகா, கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 15ம் ஆண்டு விழா நடந்தது.
இதில் 10 நாள் மகா உற்சவம் மற்றும் 6ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. தினமும் காலை 8:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் செய்து வந்தனர். 3ம் தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 1008 பால் குடம் அபிஷேகம் நடந்தது. 4ம்தேதி இரவு 7:00 மணிக்கு, ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. 8ம் தேதி, அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 விளக்குகள் அமைத்து, திருவிளக்கு பூஜை நடந்தது. 9ம் தேதி இரவு 12:00 மணிக்கு விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள், அம்மச்சார் அம்மனுக்கு பூ பல்லக்கு விழா நடந்தது. நேற்று காலை 10:45 மணிக்கு அம்மச்சார் அம்மன் திருத்தேர் வடம் பிடித் தல் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மனை மாட வீதிகள் வழியாக தேரில் ஏற்றி பவனி வந்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பத்மினி தேவி மூர்த்தி ஆகியோர் வடம் பிடித்து, தேர்திருவிழாவை துவக்கி வைத்தனர். தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், விழாகுழுவினர் நாராயணசாமி, ராமதாஸ், ரமேஷ், கார்த்திகேயன், ராஜசேகர், ரஜேஷ், கணேசன், முத்து கிருஷ்ணன் உட்பட ஏராளமான பொதுமக்கள் வடம் பிடித்தனர்.