ஸ்வாமி ஊர்வலத்தில் 6 பேர் பலியானதால் சிறப்பு பரிகார பூஜை
புதுக்கோட்டை,:புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில், ஸ்வாமி ஊர்வலத்தில், டிப்பர் லாரி புகுந்த விபத்தில், ஆறு பேர் பலியான சம்பவத்தால், சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சிறப்பு பரிகார பூஜை நடக்கிறது.சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருமயத்தை அடுத்த கடையக்குடியில் கடந்த, 3ம் தேதி இரவு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. மறுநாள், உற்சவர்களுக்கு சிறப்பு பூஜை செய்து, கோவிலுக்கு ஊர்வலமாக பல்லக்குகளில் எடுத்து வந்தனர்.கடந்த, 5ம் தேதி அதிகாலை, திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் உற்சவரை, பல்லக்கில் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்த போது, திருமயம் பாம்பாற்று பாலம் அருகே, மணல் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி, பக்தர்கள் கூட்டத்தில் புகுந்ததில், 6 பேர் பலியாகினர். இந்த விபத்தில், உற்சவர் சிலையும் கீழே விழுந்தது. இதனால், கோவிலில் யாக சாலை அமைத்து, வேத விற்பன்னர்களை கொண்டு மகா யாகம் நடத்த வேண்டும், என்று வலியுறுத்தப்பட்டது.தொடர்ந்து, கோவிலில் அமைக்கப்பட்ட யாக சாலையில், நேற்று முன்தினம் முதல் சிறப்பு பூஜைகள் துவங்கின. நேற்று, புத்துமண் எடுக்கும் பூஜை நடை பெற்றது. இன்று, (13ம் தேதி) சிறப்பு பரிகார பூஜை நடைபெறுகிறது.