உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர்: வேலூர் அருகே, பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா விமரிசையாக நடந்தது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த, வல்லண்டராமம் கிராமத்தில் பழமை வாய்ந்த பொற்கொடியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்திரை மாதம் புஷ்பரத ஏரித்திருவிழா நடக்கும். விழாவை வல்லண்டராமம், அன்னாசி பாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய கிராம மக்கள் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தாண்டு புஷ்பரத ஏரித்திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, காலை 9 மணிக்கு பொற்கொடியம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் புஷ்ப ரதத்தில் ஏறுதல், வாண வேடிக்கை, சிறப்பு மேள தாளம், கரகாட்டம், நையாண்டி மேள தாளங்களுடன் வல்லண்டராமம் கிராமத்தில் இருந்து காலை 10 மணிக்கு புஷ்பரத வீதி உலா நடந்தது.

இரவு அங்கேயே தங்கியிருந்து, பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கிறார். கிராம மக்கள் மாட்டு வண்டிகளில் பச்சை ஓலை கட்டி அதில் உறவினர்கள், நண்பர்களுடன் ஏரிக்கரைக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். நேர்த்திக்கடனுக்காக பலர் ஆடு, கோழிகளை அம்மனுக்கு பலியிட்டு, அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். சிலர் கை, கால்கள் போன்ற உருவங்களை மண்ணால் செய்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். சபக்தர்கள் அம்மன் வேடங்களில் காலில் கொக்கிலி கட்டை கட்டிக் கொண்டும், காவடி ஏந்தியும், மா விளக்கு ஏற்றி பொங்கலிட்டனர். வேலூர், குடியாத்தம், திருவண்ணாமலை, ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். * சாலை மறியல்: விழாவில் கலந்து கொள்வதற்காக, நேற்று மதியம், 12 மணிக்கு ஏராளமான பக்தர்கள் வேலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தனர். மதியம் 2 மணி வரை பஸ்கள் வரவில்லை. இதை கண்டித்து பொது மக்கள் அரை மணி நேரம் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து மாலை 3 மணிக்கு, நான்கு சிறப்பு பஸ்களை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்து பக்தர்களை ஏற்றி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !