மகா கால பைரவர் தேரில் பவனி
ஊத்துக்கோட்டை: கோடை திருவிழாவை ஒட்டி, உற்சவர் மகா கால பைரவர், தேரில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில், சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், விடுமுறை நாட்களில், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செயவர். டிசம்பர் மாதத்தில் நடைபெறும் மகா கால பைரவர் ஜெயந்தி விழாவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் இங்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவர். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், கோடை காலம் துவங்கியவுடன், கத்திரி நாளில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் தேர் திருவிழா நடைபெறும். நேற்று முன்தினம் நடந்த இவ்விழாவில், மாலை, மூலவர் மகா கால பைரவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, அலங்காரம் நடந்தது. முன்னதாக, கிராமத்தில் உள்ள பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர், சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் அமர்ந்து, தொம்பரம்பேடு, ஆலங்காடு கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், தொம்பரம்பேடு, ஆலங்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.