சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்!
ஆர்.கே.பேட்டை: சுந்தரராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு, சேஷ வாகனத்தில் உற்சவர் உலா எழுந்தருளினார். ஆர்.கே.பேட்டையில், சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக பாழடைந்து கிடந்த கோவில், சீரமைக்கப்பட்டு, கடந்த 1987ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நித்திய பூஜை, மார்கழி உற்சவம், பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட வைபவங்கள் நடந்து வருகின்றன. நேற்று, அதிகாலை 4:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. காலை 9:00 மணிக்கு, ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதை தொடர்ந்து 6:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் உள் புறப்படு எழுந்தருளினார். இன்று மாலை, சிம்ம வாகனத்தில் உலா வரும் பெருமாள், வரும் வெள்ளிக்கிழமை தேரில் வீதியுலா எழுந்தருளுகிறார்.