உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் நகைளை மீட்க அறநிலைய துறை நடவடிக்கை தேவை

பத்ரகாளியம்மன் நகைளை மீட்க அறநிலைய துறை நடவடிக்கை தேவை

சின்னாளபட்டி: அம்பாத்துரை பத்ரகாளியம்மன் கோயில் நகைகளை மீட்பதற்கு அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாத்துரையில், பாண்டிய மன்னர்கள் கட்டிய பத்ரகாளியம்மன், மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்துள்ளது. காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாமல் ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அம்மனுக்கு அணிவிக்கப்படும் நகைகளும் ஏராளமாக இருந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் அறங்காவலராக இருந்தவர் கந்தசாமி. இவரது பதவிக்காலம் முடிந்த பிறகு, பொறுப்பேற்ற அறநிலைய துறையின் தக்காரிடம் நகைகள் பட்டியலிட்டு ஒப்படைக்கப்படவில்லை. அறநிலைய துறையினரும் நகைகளை மீட்பதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நெக்லஸ் காணாமல் போனதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அம்பாத்துரை ஜமீன்தார் மற்றும் பொதுமக்கள் அறநிலைய துறையிடம் புகார் தெரிவித்தனர். பூசாரியாக பணியாற்றிய முத்துச்சாமி பணிநீக்கம் செய்யப்பட்டார். அறநிலைய துறை ஆவணங்களின்படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து நகைகளையும், முன்னாள் அறங்காவலரிடம் இருந்து திரும்ப பெறவும், காணாமல் போன நகை குறித்து விசாரணையை விரைவாக முடித்து, நகையை மீட்கவும் அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !