உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டுவருவாய் அதிகரித்த 46 கோவில்களின் தரம் உயர்வு!

ஆண்டுவருவாய் அதிகரித்த 46 கோவில்களின் தரம் உயர்வு!

காஞ்சிபுரம்: ஆண்டு வருவாய் அதிகரித்ததால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 46 கோவில்கள், தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள, இந்து கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாப்பது, கோவில்களை பராமரிப்பது மற்றும் நிர்வாகத்தை கவனிப்பது போன்ற பணிகளை, இந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது.

1,384 கோவில்கள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், மொத்தம் 1,384 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள், நிர்வாக வசதிக்காக, 6 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

தரம் பிரிப்பு: கோவில் வருமானத்திற்கு ஏற்றவாறு, கோவில்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. ஆண்டு வருவாய் 10 ஆயிரத்திற்கு மேல் 2 லட்சம் ரூபாய் வரை உள்ள கோவில்கள், 4வது நிலையிலும்; 2 லட்சம் ரூபாய்க்கு மேல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் இருந்தால், 3வது நிலையிலும்; 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 25 லட்சம் ரூபாய் வருவாய் இருந்தால், 2வது நிலையிலும் 25 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் இருந்தால், அது 1வது நிலையிலும் சேர்க்கப்படும். அந்த வகையில், மாவட்டத்தில் போதிய வருவாய் இன்றி, 1,164 கோவில்கள், எந்த பட்டியலிலும் சேராமல் இருந்தன. இவற்றில், 34 கோவில்களில் ஆண்டு வருவாய் 10,000 ரூபாய்க்கு மேல் அதிகரித்ததால், அந்த கோவில்கள் தற்போது தரம் உயர்த்தப்பட்டு, துறையின் 4வது நிலை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

3வது நிலை: இதேபோல், 10 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வரை வருவாய் உடைய 4வது நிலை பட்டியலில் இருந்த, திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில்; சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவில்; கடம்பாடி மாரி சின்னம்மன் கோவில்; சதுரங்கப்பட்டணம் மலைமண்டலப் பெருமாள் கோவில்; மதுரமங்கலம் எம்பார் வைகுண்ட பெருமாள் கோவில்; மலையம்பாக்கம் கோதண்டராம சுவாமி கோவில்; அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் ஆகிய 7 கோவில்கள், தற்போது 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் அதிகரித்து, 3வது நிலைக்கு, தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 3வது நிலையில் இருந்த, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சுவாமி கோவில், சிங்கப்பெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிங்கப் பெருமாள் கோவில், நெம்மேலி ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளை, திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் ஆகிய 5 கோவில்களின் ஆண்டு வருவாய் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், இந்த கோவில்கள், 2வது நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய நடைமுறை: கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்போது, வருவாய் உயர்ந்ததாக கண்டறியப்பட்ட, 46 கோவில்கள், வருவாய் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்த 46 கோவில்களிலும், அதற்கு ஏற்ற வகையில், புதிய நடைமுறைகள், இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !