உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் தீமிதி திருவிழா கோலாகலம்

கோவில் தீமிதி திருவிழா கோலாகலம்

ஆத்தூர்: ஆத்தூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம், ஆத்தூர் தாயுமானவர் தெருவில், பிரசித்தி பெற்ற தர்மராஜர் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த, 3ம் தேதி முதல், வரும், 26ம் தேதி வரை, தேர்த் திருவிழா நடந்து வருகிறது. அதன்படி, நேற்று, காலை, 8 மணியளவில், அரவான் பலி, அர்ஜுனன் வன்னி மரத்தில் வில் அம்பு எடுத்து மாடு வளைத்தல், கோட்டை இடித்தல், காளி வேஷம் புறப்பாடு மற்றும் மூன்று சிறிய தேர்களில் ஸ்வாமிகள் ஊர்வலம் நடந்தது. மாலை, 4.45 மணி முதல், 7 மணி வரை, வசிஷ்ட நதிக் கரையில், தீமதி திருவிழா துவங்கியது. அப்போது, திரவுபதி அம்மன் ஸ்வாமியுடன் துளுவ வேளாளர் மன்றத்தினர், தீக்குழி இறங்கினர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட, அக்னி கரகம் சுமந்தும், கைக் குழந்தைகளுடன் என, தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில், மஞ்சள், செவ்வாடை அணிந்து வந்த இரு பெண் உள்பட மூன்று பக்தர், தீக்குழியில் விழுந்தனர். அதையடுத்து, கோவில் நிர்வாகத்தினர், தீக்குழியில் இருந்து இரு பெண்களையும், லேசான காயத்துடன் மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, மூலவர் துர்க்கை அம்மனுக்கு, அபிஷேக பூஜை நடந்தது. அதன்பின், துர்க்கை அம்மன் அலங்காரத்தில், திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் வளாகத்தில், ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் ஸ்வாமிகள், சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !