ஆழ்வார் திருநகரி கோயிலில் வைகாசி அவதார திருவிழா!
தூத்துக்குடி : ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி அவதார திருவிழாவை முன்னிட்டு இன்று (மே.27) காலை மங்களாஸாசனமும், இரவில் கருட சேவை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஆதி நாதர்கோயிலில் மே 21ல் தேங்காய்சாற்றுதல், 22 ல் தங்கதோளுக்கினியான் வாகனத்தில் ஸ்ரீமதுரகவியாழ்வார் வீதியுலா நடந்தது. மே 23ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழாநாளில் இரவில் சுவாமிநம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று காலை நவ திருப்பதி கோயில்களில் உள்ள கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தன், பெருங்குளம் மாயக்கூத்தன், தொலைவில்லிமங்கலம் செந்தாமரைக்கண்ணன், இரட்டை திருப்பதி தேவபிரான், தென்திருப்பேரை ஸ்ரீநிகரில்முகில்வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநதி ஆகியோர் ஹம்ச வாகனத்திலும், மதுரகவியாழ்வார் தங்கபரங்கி நாற்காலியிலும், பூப்பந்தலில் எழுந்தருளி,சுவாமி நம்மாழ்வாரின் மங்களாஸாசனம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஆழ்வார்திருநகரி பொழிந்து நின்றபிரான், உள்ளிட்ட நவ திருப்பதி சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். கருட சேவை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், அதிகாரிகள் செய்து வருகின்றனர்.