ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவு!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், நேற்று ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவு பெற்றது.ராமேஸ்வரம் கோயிலில் மே 26 ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது. ராமாயணத்தில், சிவபக்தரான இலங்கை மன்னர் ராவணனை கொன்ற பாவத்தால், ராமருக்கு ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குவதற்காக, தனுஷ்கோடி கடற்கரையில் சிவ பூஜை நடத்திட முயன்ற சீதை, அனுமானிடம் சிவலிங்கம் வேண்டும் என கேட்கிறார்.
கைலாச மலைக்கு சென்றஅனுமான், திரும்பி வர தாமதம் ஆனதால் சீதை கடற்கரை மணலில் சிவலிங்கம் வடிவமைத்து, பூஜை செய்தார். இதனால் சினம் கொண்ட அனுமான், மணலில் செய்த சிவலிங்கத்தை வாலில் கட்டி இழுத்ததால், வால் அறுந்து விடுகிறது. பின், அனுமானின் விருப்பப்படி அவர் கொண்டு வந்த லிங்கத்திற்கும் பூஜை செய்ததாக, ராமாயணத்தில் கூறப்படுகிறது.
இதை நினைவு கூறும் விதமாக, நேற்று ராமேஸ்வரம் கோயிலில் அனுமான் வேடமணிந்த கோயில் குருக்கள் சினம் கொண்டு எழுந்த நிகழ்ச்சியும், ராமலிங்க பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜையும் நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார் ராதா, பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன், இந்து முன்னணி ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.