உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவேகானந்தர் சமாதி தினம்: விவேகானந்த கேந்திராவில் அன்ன பூஜை

விவேகானந்தர் சமாதி தினம்: விவேகானந்த கேந்திராவில் அன்ன பூஜை

கன்னியாகுமரி : சுவாமி விவேகானந்தரின் மகா சமாதி தினத்தையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் நேற்று நடந்த அன்ன பூஜையில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்து இளம் வயதிலேயே துறவியனவர் சுவாமி விவேகானந்தர். இறைவனை காணவேண்டும் என்ற வேட்கையில் பல இடங்களிலும் சுற்றித்திரிந்த விவேகானந்தர் பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார். பாரதம் முழுவதும் சுற்றி வந்த விவேகானந்தர் கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் சென்று அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் சிக்காகோ சென்று இந்து மதத்தின் பெருமையை பறை சாற்றினார். இளைஞர்கள் மத்தியில் தேச பக்தியையும், தெய்வ பக்தியையம் தட்டி எழுப்பிய வீரத்துறவி விவேகானந்தர் ஜூலை மாதம் 4ம் தேதி மகாசமாதியானார்.

இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் நான்காம் தேதி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் அன்ன பூஜை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் விவேகானந்த கேந்திரா தொண்டர்களிடம் இருந்து "அமுதசுரபி என்ற பெயரில் பிடி அரிசி சேகரிக்கப்படுகிறது. இந்த அரிசியை விவேகானந்த கேந்திராவிற்கு கொண்டு வந்து மலைபோல் குவித்து வைத்து அன்ன பூரணி விக்ரகத்திற்கு பூஜை செய்யப்படும். பின்னர் இந்த அரிசி விவேகானந்த கேந்திரத்தால் நடத்தப்படும் பாலர் பள்ளிகள், அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டின் அன்ன பூஜை நேற்று காலை 9 மணிக்கு துவங்கியது. விவேகானந்த கேந்திர அவைக்கூடத்தில் 18 டன் அரிசியை மலைபோல் குவித்து வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் அகல்விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு அரிசியின் மேல்பகுதியில் அன்னபூரணி விக்ரகம் வைக்கப்பட்டது. தொடர்ந்து அன்ன பூரணி ஸ்தோத்திரம் மற்றும் பகவத்கீதையின் விஸ்வரூப தரிசன அத்தியாயம் பாடப்பட்டது. நிகழ்ச்சியை இப்கோ நிறுவன சீனியர் அதிகாரி ஏ.கே.சிங் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விவேகானந்த கேந்திர பொதுசெயலாளர் பானுதாஸ், துணை தலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, நிர்வாக அதிகாரி கிருஷ்ணசாமி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ரகுநாதன் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த பால்வாடி ஆசிரியைகள், கன்னியாகுமரி, வள்ளியூர் விவேகானந்த கேந்திர பள்ளி மாணவர்கள், கிராம முன்னேற்ற திட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !