ஆவுடையார்கோவில் தேர்த்திருவிழா
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்று ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில். திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்துவரும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனித் திருமஞ்சனத் திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 27ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிவபெருமான் முதலமைச்சர், திரிபுரம் எரித்தல், ராஜ அலங்காரம், தாண்டவம், பிட்டுக்கு மண் சுமத்தல், மதுரையில் குதிரை சேவகனாக என பல்வேறு வேடங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. திருக்கோவில் முன்பிருந்து காலை சரியாக 10.30 மணிக்கு புறப்பட்ட தேர் மாடவீதிகளை கடந்து பகல் 1.30 மணிக்கு நிலைக்கு வந்தது. தேரில் சிவபெருமான் மாணிக்கவாசகராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் தொட்டு இழுந்தனர். இன்று பத்தாவது நாள் திருவிழாவை முன்னிட்டு சிவபெருமான் பிட்சாடணர் அலங்காரத்தில் வீதியுலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை மாலை ஆறு மணிக்கு சிவபெருமான் குருபரனாகி மாணிக்கவாசகருக்கு உபதேசம் அருளும் காட்சியுடன் திருக்கொடி இறக்கப்பட்டு ஆனத் திருமஞ்சனத் திருவிழா நிறைவடைகிறது.