பழநியில் இன்று தேரோட்டம்!
பழநி:பழநியில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் மே 26ல் துவங்கி ஜூன் 6 வரை நடக்கிறது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று கும்பகலசங்கள் வைத்து சுப்ரமணியர் ஹோமத்துடன் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் இரவு 7.15மணிக்கு மங்களவாத்தியங்கள் முழங்க மாலை மாற்றுதலும் நடந்தது. இன்று மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. பெரியநாயகியம்மன்கோயிலில் மாலை 4.30 மணிக்கு நான்கு ரதவீதிகளிலும் தேரோட்டம் நடக்கிறது. கோயில் யானை கஸ்துாரியின் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ கஸ்துாரி யானைக்கு பெரிய பிரச்னை எதுவும் இல்லை. வழக்கம்போல் தேரோட்டத்தில் பங்கேற்கும்,”என்றார்.