நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் தேரோட்டம்!
சேத்தூர் : தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலமான தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா மே 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளினர்.7ம் திருநாளான மே 29ல் திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 10 மணிக்கு சேத்தூர் ஜமீன்தார் துரைராஜசேகர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். முதலில் வந்த பெரிய தேரில் சுவாமி- பிரியாவிடை அம்மனும், இரண்டாவது வந்த சின்ன தேரில் தவம்பெற்ற நாயகி அம்பாளும் நான்கு ரத வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து நிலை சேர்ந்தனர். அம்பாள் தேருக்கு பின்னால் ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். டி.எஸ்.பி.,க்கள் சங்கரேஷ்வரன் (ராஜபாளையம்), முரளிதரன் (ஸ்ரீவில்லிபுத்தூர்) தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு, ஊர்க்காவல் படையினரும் பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாட்டை பரம்பரை அறங்காவலர் துரைராஜசேகர்,செயல்அலுவலர் ராமராஜா செய்திருந்தனர்.