உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வர் கோவில் சப்பரத்தில் தேரோட்டம்: 47 ஆண்டுக்கு பின் நிறுத்தப்பட்டதாக வருத்தம்

சுகவனேஸ்வர் கோவில் சப்பரத்தில் தேரோட்டம்: 47 ஆண்டுக்கு பின் நிறுத்தப்பட்டதாக வருத்தம்

சேலம் : சுகவனேஸ்வர் கோவில், வைகாசி தேரோட்டம் வழக்கமான முறையில் நடக்காமல், அதிகாரிகளின் அலட்சியத்தால், 47 ஆண்டுக்கு பின், கட்டு சப்பாரத்தில் இன்று நடப்பதால், பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர். சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், வைகாசி தேரோட்டம், மூவேந்தர் ஆட்சி காலம் முதல், தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வைகாசி தேர்த் திருவிழாவின் போது, கடை வீதி, முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம் பகுதிகளின் தேர்வலம் வருவது வழக்கம். ஆனால், 1965ல், சேலத்தில் பெரும் மழை, புயல் தாக்கத்தின் காரணமாக திருமணிமுத்தாற்றில், பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.அதனால், தொடர்ந்து மூன்றாண்டு, தேரோட்டம் நடத்த முடியாமல் போனது. பின்னர், கரை ஓரத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் மட்டும், தேர்வலம் வந்தது. தற்போது, 47 ஆண்டுக்கு பின், முதல் முறையாக நடப்பாண்டில், இன்று (ஜூன் 1) நடக்க விருந்த தேரோட்டம் நிறுத்தப்பட்டு, சம்பர்தாய காரணங்களுக்காக, கட்டு சப்பரத்தில் தேரோட்டம் நடக்கிறது.தற்போது, "ராஜகணபதி கோவிலின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரை பயன்படுத்த இயலாது என, கடந்தாண்டு தேரோட்டத்தின் போதே, ஹிந்து சமய அறநிலையத்துறை ஸ்தபதிகள் கருத்து தெரிவித்தனர். அந்த கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து, தேரை சரி செய்ய, கோவில் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால், இன்று கட்டுமர சப்பரத்தில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. கோவில் நிர்வாகம் புதிய தேருக்கு ஏற்பாடு செய்வதில் காலதாமதம் செய்தது, பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுகவனேஸ்வரர் கோவில் குருக்கள் கூறியதாவது:சேலத்தில், கடந்த, 1965ல் தேரோட்டம் தடை பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தேரோட்டம் நடத்த முடியாமல் போனது. தற்போது, தேரோட்டம், மீண்டும் தடை பட்டுள்ளது. அடுத்தாண்டு தேரோட்டம் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் எனில், அதற்கான பணிகளை தற்போது துவக்க வேண்டும்.புதிய தேருக்கு, 60 லட்சம் ரூபாயில் திட்டமதிப்பீடு தயார் செய்து, துறையின் அனுமதிக்கு அனுப்பி விட்டு, கோவில் நிர்வாகம் தப்பிக்க முயற்சித்து வருகிறது. துறையின் அனுமதியை விரைந்து பெற்று, ஜூலை முதல் வாரத்தில் புதிய தேருக்கான டெண்டர் வெளியிட்டால் மட்டுமே, நடப்பாண்டில் டிசம்பர் மாதத்துக்குள், தேரின் வெள்ளோட்டத்தை நடத்த முடியும்.புதிய தேருக்கான பணிகளை கோவில் நிர்வாகம் விரைந்து மேற்கொண்டால் மட்டுமே, அடுத்த ஆண்டு வைகாசித் தேரோட்டம் புதிய தேர் மூலம் மேற்கொள்ள முடியும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், கடந்த, 1965ல் தொடர்ந்து மூன்றாண்டு தேரோட்டம் தடை பட்டது போல், தற்போதும் நிகழ வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனையில் கோவில் நிர்வாகம் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !