விஜயராகவ பெருமாள் கோவில் அன்றும் இன்றும்!
சொரக்காய்பேட்டை:
சொரக்காய்பேட்டை விஜயராகவ பெருமாள் கோவில் சீரமைக்கப்பட்டு, தற்போது
ஜொலிக்கிறது. இதன் பழைய தோற்றம் குறித்து, நமது நாளிதழில் வெளியான செய்தி,
கோவிலில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு
ஒன்றியம், சொரக்காய்பேட்டை அருகே, கொற்றலை ஆற்றங்கரையில் உள்ளது விஜயவள்ளி
உடனுறை விஜயராகவ பெருமாள் கோவில். மிகவும் சிதிலமடைந்த, இந்த கோவில்
சீரமைக்கப்பட்டு, 2009ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து பல
கட்டமாக கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோபுரம், துாண்கள்
உள்ளிட்டவை வர்ணம் பூசப்பட்டு, பொன்னிறமாக ஜொலிக்கிறது. புதிய மடப்பள்ளி
கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த கோவிலின் பழைய தோற்றம்
குறித்து, நமது நாளிதழில் படத்துடன் வெளியான செய்தி, கோவில் வளாகத்தில்
பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கோவிலின் பழைய தோற்றத்துடன்
இன்றைய தோற்றத்தை ஒப்பிடும் போது, பெரும் வியப்பு ஏற்படுகிறது.
பள்ளிப்பட்டு, சொரக்காய்பேட்டை, ஆந்திர மாநிலம் சிந்தலபட்டடை, நகரி,
நாராயணவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள்
வந்து செல்கின்றனர். தினசரி ஆறு கால பூஜை நடக்கிறது. கோவில் கொடி
மரத்திற்கு நேர் எதிரில், நாமம் வடிவில் வளர்ந்து வரும் எட்டி மரத்திற்கு,
தற்போது தனி சன்னிதி கட்டப்பட்டுள்ளது.