உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோன சித்தர் ஆசிரமத்தில் மகா கும்பாபிஷேக விழா!

மோன சித்தர் ஆசிரமத்தில் மகா கும்பாபிஷேக விழா!

செஞ்சி: செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் நடந்த மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதப் பெருமான் கோவில் மகா கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட் டம், செஞ்சி அருகே, செத்தவரை கிராமத்தில் உள்ள சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில், புதிதாக மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதப் பெருமான் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தட்சிணாமூர்த்தி, துர்கை, ஜெயவிநாயகர், பாலமுருகன், கால பைரவர், நவ கிரகங்கள், 18 சித்தர்கள், நாயன்மார்கள், மாணிக்கவாசகர், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், 32 அடி உயர சிவதப சிலை மற்றும் கொடிமரம் அமைத்துள்ளனர்.

கோவில் மகா கும்பாபிஷேக விழா, கடந்த 5ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, கோ பூஜையுடன் துவங்கியது. 6ம் தேதி காலை, 6:30 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி, 11:00 மணிக்கு, பரிவார தெய்வங்கள் கரிக்கோலம் நடந்தது.

நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி முடிந்து, 9:00 மணிக்கு, விநாயகர், முருகர், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, சிவஜோதி மோன சித்தர் தலைமையில், திருக்குடங்கள் புறப்பாடு, 11:15 மணிக்கு, மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதப் பெருமான் மற்றும் 32 அடி உயர சிவதப சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

மதியம், 12:00 மணிக்கு, தச தரிசன வழிபாடு, சிவஜோதி மோன சித்தர் அருளாசி, அன்னதானம் நடந்தது. புதுச்சேரி, கடலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !