ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிப்போம்!
புதுடில்லி:பார்லிமென்டில் சட்டம் இயற்றுவதன் மூலமோ அல்லது அரசின் நடவடிக்கை மூலமோ, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியாது. இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கோர்ட் என்ன உத்தரவிடு கிறதோ, அதை மதித்து நடக்க நாங்கள் தயார் என, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
மத்தியில் ஆளும், பா.ஜ.,வின் தாரக மந்திரங்களில் ஒன்று, அயோத்தியில் ராமர் கோவில்
கட்டுவது. ஆனால், கூட்டணி ஆட்சி என்பதாலும், ராஜ்யசபாவில் போதிய, எம்.பி.,க்கள் பலம் இல்லை என்பதாலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை, பா.ஜ., ஆற போட்டுள்ளது. ஆனால், பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யும், அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள, பைசாபாத் லோக்சபா தொகுதி முன்னாள் எம்.பி.,யுமான வினய் கடியார், சமீபத்தில் அதிரடியாக பேட்டியளித்தார்.அயோத்தி ராமர் கோவில் வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கோர்ட் உத்தரவு பற்றி கவலைப்படாமல், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, மோடி அரசு முன்வர வேண்டும் என்றார்.
இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த, வட மாநில முஸ்லிம்களின் உயரிய அமைப்புகளில் ஒன்றான, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர், அப்துல் ரகீம் குரேசி,கூறியதாவது:வினய் கடியார், விரக்தியில் உள்ளார். ராமர் கோவில் விவகாரத்தில் அரசியல் செய்து வரும் அவருக்கு, மோடி தலைமையிலான அரசின் பிரதி நிதித்துவம் கிடைக்கவில்லை. இதனால், அரசு மீது அதிருப்தியில் உள்ள அவர், தன் எதிர்ப்பை வேறு விதமாக காட்டும் வகையில், நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்க தேவையில்லை; ராமர் கோவில் கட்டுங்கள் என, போர்க்கொடி துாக்கியுள்ளார்.எங்களைப் பொறுத்தமட்டில், இந்த விவகாரத்தில், பார்லிமென்டில் சட்டம் இயற்றினாலும், அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். கோர்ட் என்ன உத்தரவிடுகிறதோ, அதை தான் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.
சாக் ஷி மகராஜ் மீண்டும் சர்ச்சை:பா.ஜ., ஆட்சியிலேயே கண்டிப்பாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். பா.ஜ., ஆட்சியில் ராமர் கோவில் கட்டவில்லை எனில், வேறு எந்த ஆட்சியில் கட்ட முடியும்? என, சர்ச்சைக்குரிய பா.ஜ., - எம்.பி., சாக் ஷி மகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
உ.பி., மாநிலம் உன்னோவா தொகுதியின் எம்.பி., சாக் ஷி மகராஜ். பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், சர்ச்சைக்குரிய வகையில் பேசி, எதிர்க்கட்சியினரின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், உ.பி., மாநிலத்தில் நேற்று அவர் கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் கட்டவில்லை என்று, பலரும் கூறுகின்றனர். பா.ஜ., ஆட்சி, இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு உள்ளது. கண்டிப்பாக, இந்த நான்கு ஆண்டில் ராமர் கோவில் கட்டப்படும். பா.ஜ., ஆட்சியில் ராமர் கோவில் கட்டவில்லை என்றால், காங்கிரஸ்ஆட்சியிலா கட்ட முடியும்? முலாயம் சிங் யாதவும், மாயாவதியுமா, ராமர் கோவிலை கட்டுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.